Saturday, October 17, 2015

பிளாட்பாரம் 
-----------------------
ரயில் நின்றவுடன் 
ஜன்னல் வழியே பார்க்கிறேன்! 
மலைபோல் விதவித நிறங்களில் 
வாழை பழங்களை மட்டும்
தள்ளிக்கொண்டு வருபவரை!
உள்ளே மிகவும் கனிந்து
கறுத்த ஒரு பழம்
ஒளிந்து கொண்டு இருக்கிறது!
யார் கண்ணிலோ பட்டு
குப்பை தொட்டிக்கு போகும்வரை!

Monday, February 18, 2013

காதலர் தினம் - குட்டி கதை


குட்டி கதை - காதலர் தினம் 
----------------------------------------------
கடந்த ஒரு மாதமாய் வித விதமாய் யோசித்து, பல "மாம்ஸ், மச்சான்ஸ்" கூட பேசி, அங்க இங்கன்னு காசெல்லாம் சேத்து அற்புதமான gift வாங்கினான் ஷ்யாம். ஒரு நிம்மதி பெருமூச்சி.

அடுத்த நாள் காதலர் காதலர் தினம். 10 மணிக்கு நிஷாவ அவ ஆபீஸ் வாசல்ல பாத்து... . 

"இன்னிக்கி என் மனச உன்கிட்ட ஓபன் பண்றேன் நிஷா. இந்தா...என்னோட காதல் சின்னம் உனக்கு...."

டக் என நிஷா மனதில் ஒரு rewind பட்டன் press.

"இவன் எப்படி 3 வருஷம் முன்னால மகேஷ் சொன்ன அதே டயலாக் சொல்லறான்."

Wednesday, February 13, 2013

பிச்சிடுவேன்....பிச்சி....- குட்டி கதை

பயந்து கொண்டே தன் மேனேஜர் அறையை திறந்தார் செந்தில் இன்னிக்கு என்ன இருக்குமோன்னு .

"என்ன ஆர் எஸ் சார் ! உங்களுக்கு எத்தனைதரம் சொல்றது. அந்த கிளையன்ட் இதயம் மோட்டோர்ஸ் பைல க்ளோஸ் பண்ண ஒரு வாரம் ஆச்சா!" சிம்ம த்வனியில் சீறினார் மேனேஜர் பாலன்.

"இல்ல சார் அது வந்து......"

"எனக்கு excuse எல்லாம் வேண்டாம்.....பிடிக்காததுன்னு தெரியும் இல்ல...."

செந்தில்லுகு என்ன பேசுவதுன்றே தெரியவில்லை. இது இருபதாம் முறை.

போன் அடித்தது. வீட்டு நம்பரை பார்த்த சிங்கம் உடனே பூனையாகியது.

" சொல்லும்மா! காலையிலேயே பசங்கள ஸ்கூல் வாசல்ல டிராப் பண்ணிட்டேனே.....சரிம்மா... சரிம்மா....சாயங்காலம் கூட்டிட்டு வரேன். இன்னிக்கி சரி பண்ணிடலாம். வேற ஒன்னும் இல்லையே....சரி வெச்சிடறேன்...."

"உங்களுக்கு கம்ப்யூட்டர் ரிப்பேர் வரும்னு சொன்னிங்களே! வீட்டுல கம்ப்யூட்டர் வொர்க் ஆகல. சாயங்காலம் வீட்டுக்கு போயி பாத்துட்டு போலாம்" மீண்டும் சிங்கம்.

மாலை 6 மணி. பாலா வீட்டை திறந்துகொண்டு முதலில் உள்ளே நுழைய கூடவே செந்திலும்.

"வா பாலா! என்ன இவ்ளோ லேட்....இங்க ஒருத்தி வீட்டுல இருக்கேன்னு தெரியாதா!" ஹாலில்ருந்து அதட்டினாள் ஹேமா.

"இல்லம்மா....கொஞ்சம் லேட் ஆச்சி" மெதுவாய் பாலா ஹாலுக்கு செந்திலுடன் நகர்ந்தார்.

"வாங்க சார்! வாங்க சார்!....பாலா....என்ன சும்மா நின்னுகிட்டு இருக்க...போய் சேர் கொண்டு வா.....என்னோட கம்ப்யூட்டர் சார் இவர்....செந்தில் சார் காபி......."

"பாலா....அப்படியே ஒரு காபி போட்டுட்டு வா...." சத்தமாய் கத்தினாள் ஹேமா.

Tuesday, February 12, 2013

சொர்க்க வாசல் - குட்டி கதை

"காலைல சீக்கரம் எந்திரிக்கனும்! விடிஞ்சா சொர்க்க வாசல் சீக்கரம் தூங்குடா" அதட்டினார் அப்பா 

'இந்த ஆளுக்கு இதே வேலைதான். பையன நல்லா கவனிக்க வேண்டிய வயசுல இப்படி திட்டிகிட்டு......" அம்மாவின் அதே முணுமுணுப்பு

அசதியாய் நிலாவை பார்த்துக்கொண்டு தூங்கினான் ஏழு வயது  ராமரு.

காலை 4 மணி. "டேய் ராமரு! எந்திரு எந்திரு! கோயில கூட்டம் வந்துரும்" அதே அதட்டல் அப்பாவிடமிருந்து....

கண்ணை கசக்கிக்கொண்டு இருந்த ராமரின் மூஞ்சை கழுவி நெற்றியில் நாமத்தை இட்டு பாதி வேட்டியை கட்டி விட்டு விறு விறு என கூட்டி போனார் அப்பா. அவருடைய வேகத்துக்கு நடக்க முடியாமல் ஓடினான் ராமர்.

கோயில் வாசலை அடைய 4:10 ஆகி விட்டது. அவசர அவரசமாக அவனை நான்காம் இடத்தில நிறுத்திவிட்டு அப்பா ஐந்தாவது இடத்தில..   

குளிரில் உடல் சிறிது நடுங்க பாதி தூக்கத்தில் ராமர் சொல்ல ஆரம்பித்தான்.  

"அய்யா! தர்மம் பண்ணுங்க! நல்லா இருக்கனும் நீங்க....அய்யா அம்மா!!! "   

Wednesday, September 15, 2010

எங்கே செல்லும் இந்த பாதை

"வாங்க தம்பி! பாத்து ரொம்ப நாளாச்சி" என்று சிக்னல்மேன்  மாணிக்கம் கேட்க, கருப்பு தார் பூசப்பட்டு பளிச் மஞ்சளில் " உத்தம சோழபுரம் சந்திப்பு            " என்ற போர்டின் கீழ் உள்ள சிமெண்ட் பெஞ்சில் கதிர் என்கிற கதிரேசன் உட்கார்ந்தான். 

"ஆமாங்க! Exams நடந்திட்டு இருக்கு. அடுத்த வாரம் வரைக்கும்" கையில் இருக்கும் Discrete Mathematics புத்தகம் அடுத்த தேர்வுக்கான அடையாளத்தை காண்பித்து.

கதிருக்கு மிகவும் பிடித்த இடம் இந்த சிறிய ஊரின் ரயில்வே ஸ்டேஷன். மிகுந்த அமைதி, தினசரி பகலில் நிற்காமல் கிராஸ் செய்யும் 5 ரயில்கள், நிற்கும் ஒரு Passenger ரயில், 3 கூட்ஸ் ரயில்கள், சுற்றி இருக்கும் கருப்பு தடுப்புகள், தண்டவாளத்தை சுற்றி எப்பொழுதும் இளமையுடன் இருக்கும் கற்கள், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் செல்லும் முடிவில்லாத ரயில் பாதை, தண்ணீர் வராத குழாய், 3 சிமெண்ட் பெஞ்சிகள், காலை 2 மணி, மாலை 2 மணி என திறந்து இருக்கும் டிக்கெட் கவுன்ட்டர், ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் என்று ஊரால் ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இந்த இடம் அவனுக்கு ஏதோ அமைதியையும், பிரமிப்பையும் சிறு வயது முதல் கொடுத்து இருந்தது.

"சரவணனுக்கும் பரிட்சை நடந்துட்டு இருக்கு தம்பி!" என்றார் மாணிக்கம்.

மாணிக்கத்தின் வாழ்க்கை கொஞ்சம் சாதரணமானது. கொஞ்சம் என்ன! நிறையவே! பகலில் கையில் இருக்கும் ஒரு பச்சை மற்றும் சிவப்பு கொடி. இரவில் அதே நிறங்களில் ரயில்வே டார்ச் லைட். அவருடைய 20 வருட பணியில் சிவப்பிற்கு வேலை இருந்ததே இல்லை. போகும் மற்றும் வரும் ரயில்களுக்கு எல்லாம் நின்று கொண்டு பச்சை நிறம் காண்பிப்பார். மற்ற நேரம் எல்லாம் அந்த பெஞ்சில் இருப்பார்.
சரவணன் அவருடைய 5 - ம் வகுப்பு படிக்கும் மகன்.

"வெஸ்ட் கோஸ்ட் இன்னிக்கி கால் மணி லேட் தம்பி!" என்று கூறியவாறே பச்சை கொடியின் மடிப்பை கலைத்து கொண்டிருந்தார்.

"சிவஞானம் வாத்தியார் சொன்னாரு இவன்தான் கிளாஸ்-ல முதல்ல வரானாம். நல்ல படிக்க வை மாணிக்கம்னு"

"அப்படிங்களா" கேட்டான் கதிர்.

"ஆமா தம்பி! உங்கள மாதிரி அவன நல்லா படிக்க வெச்சி engineer ஆக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை"

தடக் தடக் என வேகமாக வெஸ்ட் கோஸ்ட் கிராஸ் செய்ய நின்று கொண்டு பச்சை கொடியை அசைத்தார்.

"வர சம்பளத்துல பாதிக்கு மேல அவன் படிப்புக்குத்தான் செலவாகுது தம்பி. ஆனா பையன் நல்லா படிக்கரான்னு ஒரு சந்தோசம்"

நாட்கள் செல்ல செல்ல கதிருக்கு மாணிக்கம் சரவணன் மேல் வைத்து இருந்த நம்பிக்கையும் கனவும் புரிய ஆரம்பித்தது.  பல விதமான தியாகங்கள், பொறுத்து கொள்ளும் மனப்பாங்கு, சிறிய குடிசை வீட்டில் அவரும், அவருடைய மனைவியும் மண்ணெண்ணெய் விளக்குடன் தினசரி ஒரு போராட்டமாய் சரவணனுக்காக வாழ்வது ஆச்சர்யமாய் இருந்தது. கதிருடைய ஒவ்வொரு வார்த்தையிலும் மாணிக்கம் சரவணனை பொருத்தி அழகு பார்த்துக்கொண்டிருந்தார்.

தனது படிப்பை முடித்து விட்டு கதிர் டெல்லிக்கு பயணமானான். அடுத்த வருடத்திலேயே அவனது மாமாவிற்கு வேறு ஊருக்கு மாற்றலாகிவிட வாழ்க்கை பரபரப்பாகி போனது.

30 வருடங்களுக்கு பிறகு "அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், சோழவந்தான்" என்ற போர்டின் கீழ் பஸ் நிற்க கதிரேசன் என்ற அந்த பெரியவருக்கு மாணிக்கத்தின் நினைவு வந்தது. தனது தொடர் பயணத்தையும் மறந்து வேகமாய் கீழே அவர் இறங்கி "ரயில்வே ஸ்டேஷன் போகணும்பா" என்று சொல்லி ஆட்டோவில் அமர்ந்தார்.

ரயில்வே ஸ்டேஷன் சிறிது அடையாளம் மாறி இருந்தது. நிறைய கடைகள் இருந்தன. சுற்றிலும் கொஞ்சம் மக்கள் கூட்டம். நிறைய மாடுகள். சற்று மூலையில் "அங்காளம்மன் இன்டர்நெட் cafe " என்று இருந்த போர்டில் கருப்பு காகம் உட்கார்ந்து இருந்தது. புதிதாய் வந்து இருந்த பிள்ளையார் கோவிலின்  கதவு பூட்டப்பட்டு இருந்தது.  வாசலில் ஒரு முதியவர் துண்டு விரித்து தூங்கி கொண்டு இருந்தார். டீ கடையில் பூம் பூம் ரோபோடா என்று எந்திரன் பாட்டு ஒலித்து கொண்டு இருந்தது.

கொஞ்சமும் மாறாமல் சிறிய புதர்களுடன் இருக்கும் அந்த ஒத்தயடி பாதையில் வேகமாய் கதிரேசன் நடக்க மஞ்சள் போர்டு தெரிந்தது. அதே பளிச். அதே தார் பூச்சு. சிமெண்ட் பெஞ்சை ஒருவித ஆனந்த தேடலில் கதிரேசன் தடவி உட்கார்ந்தார். தண்டவாளத்தை சுற்றி இருக்கும் இன்னும் இளமை மாறாத கற்களை ஆசையுடன் பார்த்தார்.

சத்தமாய் பக்கத்தில் செல் போன் சத்தம் ஒலிக்க கதிரேசன் திரும்பினார்.

"சார்! ஸ்டேஷன் மாஸ்டரா! நான் சரவணன் பேசறேன் சார்! இன்னிக்கி ப்ளூ மௌன்டைன் அரை மணி லேட்டாம். 10th ல நம்ம அருண் ஸ்கூல் பர்ஸ்டு வந்து இருக்கான் சார். எப்படியாச்சும் அவன டாக்டர் ஆக்கணும்னு ஆசை"

குரலை கேட்டு கொண்டே கதிரேசன் சிமெண்ட் பெஞ்சை விட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தார். மதிய வெயிலில் கானல் நீருடன் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை செல்லும் நீண்ட ரயில் பாதை அதே அமைதியுடனும் பிரமிப்புடனும் தெரிந்தது.

-Saveena

Wednesday, August 11, 2010

Tropicana

மிதமாய் குளிரூட்டப்பட்ட கண்ணாடி ஏ.சி அறையில் passcode பதித்துவிட்டு அஷ்வின் குமாருடன் ரகசிய ஆலோசனை செய்துவிட்டு வெளியே வந்தார் நாசா (NASA) - வின் Director ரிச்சர்ட் கெவின். அமெரிக்காவின் தலை சிறந்த அணு ஆயுத விஞ்ஞானிகளில் நம் இந்திய அஷ்வின் குமாரும் ஒருவன். இந்தியாவில் படிப்புக்கான விருதுகளில் எல்லாவற்றையும் பெற்று விட்டு, IIT - ல் M . Tech முடித்தவுடன் அமெரிக்கா அவனை தத்து எடுத்து கொண்டு விட்டது. இப்போது அப்போலோ-20 ப்ரொஜெக்டின் Cheif Scientist உத்தியோகம்.

மின்னலாய் இருக்கும் அவனது மூளையில் தோன்றும் solution கள் அனைவரையும் வியப்படைய செய்வதோடு அதைவிட வியக்கத்தக்க ஒரு விஷயமும் அவனிடம் இருந்தது.

"ஏண்டா இப்படி பண்ண!" கேட்டு கொண்டே அவனது நண்பன் மகேஷ் HardRock Cafe -ல் உட்கார்தான்.

"என்னடா! வர்ஷா சொன்னாளா!" என்றான் அஷ்வின்.

"ஆமா! எவனாச்சும் 15,௦௦௦ டாலர வால்மார்ட் வாசல்ல Charity க்கு குடுப்பானா?"

"அங்க இருக்கறவங்க எல்லாம் ரொம்ப மூளை வளர்ச்சி இல்லாதவங்கடா. என்னால தாங்க முடியல!" என்றான் அஷ்வின்.

"அதுக்குன்னு இப்படியா?" இது மகேஷ்.

"மகேஷ்! நம்மள மாதிரி இருக்கறவங்க ஹெல்ப் பண்ணாம யாருடா பண்ணுவா?"   salad இல் orange dressing -இ பரப்பியபடியே  கூறினான் அஷ்வின். ஆனால் அவனுடைய கண்கள் மட்டும் அந்த மூலையில் அமர்ந்திருக்கும் அந்த வயதான வெள்ளைகார முதியவரின் மீது இருந்தது.

ஏழு அடிக்கும் கொஞ்சம் கம்மியான உயரம். மிகவும் மெலிந்த தேகம். ஜீன்ஸ் வுடன் formal ஷர்ட் அணிந்து இருந்தார். பிரவுன் கலர் பெல்ட் உடன் collar பட்டன் போட்டு இருந்தார். ரொம்பவும் குனிந்த தலை. தன்னுடனேயே நிறைய பேசிக்கொண்டு இருந்தார். அடிக்கடி தலையை நிமிர்ந்து மேலே இருக்கும் T . V . உடன் பேசினார். சில வார்த்தைகள் உரக்கமாய். சிறிய சைஸ் Tropicana ஆரஞ்சு ஜூஸ் பெட்டியை வைத்துக்கொண்டு இரண்டு straw உடன் குடித்து கொண்டு  இருந்தார். அடிக்கடி அந்த பெட்டியின் வாசகங்களை படித்து கொண்டும் இருந்தார்.

"இப்படி இருக்கறவங்கள பார்தாதாண்ட என்னால தாங்க முடியல" என்றான் அஷ்வின். 

"ஆரம்பிசிடயா! திரும்பவும்...." இது மகேஷ்.
அந்த அமெரிக்க முதியவர் அப்போது Trash கேன் அருகில் நின்று கொண்டு மாறி மாறி முதலில் எந்த starw வை போடலாம் என்று தனக்குதானே பேசிக்கொண்டு இருந்தார்.

இரவு எட்டு மணி. மிகவும் களைத்துப்போய் 15 மணி நேர தொடர் உழைப்பின் காரணமாய் கொஞ்சம் கண் சிவப்புடன் keyboard - ல் டைப் செய்து கொண்டு இருந்தான் அஷ்வின்.

"Ashwin ! Time is critical! let us call Johnny!" என்றார் ரிச்சர்ட் கெவின்.

"Dr Kevin! Module 18's script is okay. But Eutoro processor's main module is not compatible and it is failing" என்றான் அஷ்வின்.

"So.....what's the plan?" இது ரிச்சர்ட்.

"I am writing the new assembler. Scott is parallely testing. We should be all set in 2 hours" அஷ்வின் கூறினான்.

அவன் மனதிற்குள் அந்த எண்ணம் ஓட ஆரம்பித்தது. இந்த முறை அந்த Johnny ஐ விட கூடாது. அவனுடைய இந்த எண்ணத்திற்கு காரணம், போன வருடம் Shuttle மேலே இருக்கையில் மிக நுண்ணிய கோளறு ஏற்பட எல்லாமே Johnny என்று ஆனது. போனிலேயே Johnny solution ஐ மிக நுணுக்கமாய் தீர்க்க பல மில்லியன் டாலர் இழப்பு தடுக்கபட்ட்டது.

மறுநாள் இரவு 10 மணி. மீண்டும் Hard Rock Cafe ல் மகேஷுடன் அஷ்வின்.

"Successful launch டா. 2 hours ஆச்சு" என்றான் அஷ்வின்.

"Wow ! Congrats டா" என்றான் மகேஷ்.

"இந்த முறை அந்த Johnny ய விடல இல்ல!" சிறிய கர்வ சிரிப்புடன் அஷ்வின் french fries ற்கு சிவப்பு வண்ணம் பூசி கொண்டு இருந்தான். சிறிய சலசலப்பு பக்கத்து இரண்டு டேபிள் விட்டு.

"We are scared of his behaviour" என்று ஒரு பெண்மணி மேனேஜர் உடன் உரையாடிக்கொண்டு இருந்தார். மேனேஜர் அவளை convince பண்ணி கொண்டு இருக்க அஷ்வின் மீண்டும் அந்த வயதான அமெரிக்கரை பார்த்தான். இம்முறை இரண்டு Tropicana பெட்டியில் இரண்டு straw போட்டு குடித்து கொண்டு இருந்தார். மீண்டும் T . V உடன் உரக்க பேச்சு. அவரையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்த அஷ்வினின் கவனத்தை அவனது போன் ரிங் கலைத்தது.

"Yes Dr. Kevin."

"Ashwin! Where are you? We have an emergency now. Module 14 is not responding. We have been trying for 5 minutes"

"Everything was okay in the trail. I am not sure...I will be there in 10 minutes" என்றான் அஷ்வின்.

"No! we don't have time. Let us call Johnny! Hold on. I will try a conference" மிக மெல்லிய சிம்போனி இசை போன் ல் தொடர அஷ்வின் ரெஸ்ட் ரூம் நோக்கி விரைந்தான்.

அங்கே அந்த அமெரிக்க முதியவர் உள்ளே பாத்ரூம் சென்சாருடன் விளையாடிக்கொண்டிருந்தார். Ceiling ஐ மேலும் கீழும் பார்த்துக்கொண்டு இருந்தார்.

பாக்கெட்டில் திடீரென கைவிட்டு "This is Johnny!!!" என்றார் உரக்கமாய்.

- Saveena

Tuesday, August 3, 2010

திருநா

"திருநா எங்கே!" என்று கேட்டுகொண்டே மேனேஜர் உள்ளே நுழைய, திருநா என்கிற திருநாராயணன் மேனேஜர் அறையில் அன்று அவர் பார்க்க வேண்டிய கடன் வசூல் பைல்ஐ வைத்து கொண்டு இருந்தான். அயன்மேட்டில் உள்ள அந்த சிறிய வங்கியில் திருநா தான் எல்லாம். ஏழாம் வகுப்பு முடித்தவுடன் அவன் தந்தை இறக்க, அவரது வாட்ச்மன் உத்தியோகம் இவனுக்கு messenger உத்தியோகத்தை தந்தது.

"இன்னிக்கி மார்ச் 8, நாளைக்கி ஆடிடர் எல்லாம்  மெட்ராஸ் ல இருந்து வராங்க  ஆர் எஸ் சார்" என்று அவன் சொல்ல, "ஆமாண்டா, நான் மறந்துட்டேன். நீ போயி அந்த balance பைல்ஐ கொண்டு வா. கணக்குல ஏதோ tally ஆகாமா இருக்கு" என்று ஆர் எஸ் சொன்னார்.

மணி 9:30 ஐ தாண்ட, திருநா பரபரப்பாக சுழன்று கொண்டு இருந்தான். "சார், உங்களுக்கு மசால் வடை, சக்கரை போடாத காபி" என்று கூறிக்கொண்டே "அம்மா, இங்க உக்காருங்க. மேனேஜர் உள்ளே இருக்காரு. வீடு பத்திரம் எல்லாம் கொண்டு வந்து இருக்கீங்க இல்ல!" என்று லோன் கேட்டு மகனுடன் வந்து இருக்கும் அம்மாவை உக்கார சொன்னான்.

"திருநா!, ஸ்டேட் பேங்க் போயி இந்த DD எல்லாம் கொடுத்திட்டு வா"

"திருநா!, போஸ்ட் ஆபீஸ் போயிட்டு வரப்ப வசந்த பவன் ல ரெண்டு லஞ்ச் பொட்டலம் வாங்கி வந்திரு!  கூடவே இந்த வார ஜூ வீ"" இப்படி எல்லோருக்கும் எப்போதும் திருநா தான் எல்லாம் அந்த வங்கியில்.

எத்தனை வேலை செய்தாலும், யார் எது சொன்னாலும் சிரிப்பு மட்டுமே அவனது பதிலாக இருக்கும். அவன் ஒரு நாள் வரவில்லை என்றாலும் வங்கியே ஸ்தம்பித்தது போல இருக்கும்.

கேஷியர் சோமசுந்தரம் அவனிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி "எப்படி திருநா நீ முகம் சுளிக்காம எல்லோருக்கும் வேலை செய்யற?" "கடமைய செய்யினு அப்பா அடிகடி சொல்லுவார் சார்" என்பான் சிரித்துகொண்டே.

மதியம் ரெண்டரை மணி இருக்கும். திருநா சைக்கிளை stand போட்டு விட்டு வங்கி உள்ளே நுழைய "திருநா! அந்த அம்மாவும் பையனும் ரொம்ப நேரம் உனக்காக காத்துகிட்டு இருக்காங்க" என்றார் காஸியர் சோமசுந்தரம். திருநா அருகே நெருங்க கண்ணீருடன் அவனுக்கு வணக்கம் சொன்னார் அந்த அம்மா. அந்த பையனும் பவ்யமாய் எழுந்து வணங்க "உன்னால் தாம்பா என் பையனுக்கு  இன்னிக்கி மெட்ராஸ்ல நல்ல வேலை கெடச்சி இருக்கு" என்றார் மீண்டும் கண்ணீருடன்.

"இல்லை அம்மா! அதெல்லாம் ஒன்னும் இல்ல!" இது திருநா.

 "இல்லப்பா, நீ மட்டும் அன்னிக்கி மேனேஜர் கிட்ட நெறைய பேசி சிபாரிசு பண்ணி இருகலேன்னா என்னை மாதிரி ஏழைக்கி எப்படி லோன் கெடச்சி  இவன் இன்ஜினியரிங் பண்ணி இருக்க முடியும்" மீண்டும் கண்ணீர்.

கொண்டு வந்த ஸ்வீட் பாக்கெட்டை திருநாவிடம் கொடுத்துவிட்டு மீண்டும் நன்றியுடன் அவர்கள் விடை பெற "திருநா 3 காபி 2 டீ" என்று ஆர்டர் வர மீண்டும் பரபரபானன் திருநா.

காலம் கடந்து கொண்டு இருந்தது. சைக்கிள், வீடு, வங்கி என திருநா உழன்று கொண்டு இருந்தான். "இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்மா. இப்பவே எனக்கு எதுக்கு பொண்ணு பாக்கற" என்று அம்மாவை அடிகடி மறுத்தான். 

அன்று புதன் கிழமை. அவன் வீடு அருகே ஒரே கூடம். "போஸ்ட் ஆபீஸ் போயிட்டு வர வழில இப்படி....ரோட சைக்கிள்ள கிராஸ் பன்றப்ப...." என திலகா மேடம் முனுமுக்க, திருநாவின் உடல் கிடத்தப்பட்டு இருந்தது. நெற்றியை சுற்றி 
வெள்ளை துணி கட்டப்பட்டு இருந்த உடலை பார்த்தபடி அவன் அம்மா அழுது கொண்டு இருக்க, முகத்தை துரத்தும் ஈ ஐ அவன் தங்கை விரட்டி கொண்டு இருந்தாள்.

வங்கி ஊழியர்கள் எல்லோரும் கண்ணீருடனும், மௌனதுடனும் இருக்க "அந்த பையன் தினம் போற ரோடு தான். எப்படி இப்படி...." என்று முனுமுனுப்புகள் இருந்தன. "சார் எல்லாம் ரெடி" என சோமசுந்தரம் மேனேஜர் காதில் கூற திருநா என்கிற திருநாராயணன் உடல் அந்த ஆம்புலன்ஸ் ல் ஏற்றப்பட்டது. எல்லோரும் உள்ளே ஏற ரோசா இதழ்களுடன் வண்டி நகர காஷியர் சோமசுந்தரம் வண்டியின் உள்ளே மேலே பார்த்தார். 

"கடமையை செய், பலனை எதிர் பார்காதே" என்ற வாசகம் அச்சாய் எழுதப்பட்டு இருந்தது.

-Saveena