Wednesday, September 15, 2010

எங்கே செல்லும் இந்த பாதை

"வாங்க தம்பி! பாத்து ரொம்ப நாளாச்சி" என்று சிக்னல்மேன்  மாணிக்கம் கேட்க, கருப்பு தார் பூசப்பட்டு பளிச் மஞ்சளில் " உத்தம சோழபுரம் சந்திப்பு            " என்ற போர்டின் கீழ் உள்ள சிமெண்ட் பெஞ்சில் கதிர் என்கிற கதிரேசன் உட்கார்ந்தான். 

"ஆமாங்க! Exams நடந்திட்டு இருக்கு. அடுத்த வாரம் வரைக்கும்" கையில் இருக்கும் Discrete Mathematics புத்தகம் அடுத்த தேர்வுக்கான அடையாளத்தை காண்பித்து.

கதிருக்கு மிகவும் பிடித்த இடம் இந்த சிறிய ஊரின் ரயில்வே ஸ்டேஷன். மிகுந்த அமைதி, தினசரி பகலில் நிற்காமல் கிராஸ் செய்யும் 5 ரயில்கள், நிற்கும் ஒரு Passenger ரயில், 3 கூட்ஸ் ரயில்கள், சுற்றி இருக்கும் கருப்பு தடுப்புகள், தண்டவாளத்தை சுற்றி எப்பொழுதும் இளமையுடன் இருக்கும் கற்கள், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் செல்லும் முடிவில்லாத ரயில் பாதை, தண்ணீர் வராத குழாய், 3 சிமெண்ட் பெஞ்சிகள், காலை 2 மணி, மாலை 2 மணி என திறந்து இருக்கும் டிக்கெட் கவுன்ட்டர், ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் என்று ஊரால் ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இந்த இடம் அவனுக்கு ஏதோ அமைதியையும், பிரமிப்பையும் சிறு வயது முதல் கொடுத்து இருந்தது.

"சரவணனுக்கும் பரிட்சை நடந்துட்டு இருக்கு தம்பி!" என்றார் மாணிக்கம்.

மாணிக்கத்தின் வாழ்க்கை கொஞ்சம் சாதரணமானது. கொஞ்சம் என்ன! நிறையவே! பகலில் கையில் இருக்கும் ஒரு பச்சை மற்றும் சிவப்பு கொடி. இரவில் அதே நிறங்களில் ரயில்வே டார்ச் லைட். அவருடைய 20 வருட பணியில் சிவப்பிற்கு வேலை இருந்ததே இல்லை. போகும் மற்றும் வரும் ரயில்களுக்கு எல்லாம் நின்று கொண்டு பச்சை நிறம் காண்பிப்பார். மற்ற நேரம் எல்லாம் அந்த பெஞ்சில் இருப்பார்.
சரவணன் அவருடைய 5 - ம் வகுப்பு படிக்கும் மகன்.

"வெஸ்ட் கோஸ்ட் இன்னிக்கி கால் மணி லேட் தம்பி!" என்று கூறியவாறே பச்சை கொடியின் மடிப்பை கலைத்து கொண்டிருந்தார்.

"சிவஞானம் வாத்தியார் சொன்னாரு இவன்தான் கிளாஸ்-ல முதல்ல வரானாம். நல்ல படிக்க வை மாணிக்கம்னு"

"அப்படிங்களா" கேட்டான் கதிர்.

"ஆமா தம்பி! உங்கள மாதிரி அவன நல்லா படிக்க வெச்சி engineer ஆக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை"

தடக் தடக் என வேகமாக வெஸ்ட் கோஸ்ட் கிராஸ் செய்ய நின்று கொண்டு பச்சை கொடியை அசைத்தார்.

"வர சம்பளத்துல பாதிக்கு மேல அவன் படிப்புக்குத்தான் செலவாகுது தம்பி. ஆனா பையன் நல்லா படிக்கரான்னு ஒரு சந்தோசம்"

நாட்கள் செல்ல செல்ல கதிருக்கு மாணிக்கம் சரவணன் மேல் வைத்து இருந்த நம்பிக்கையும் கனவும் புரிய ஆரம்பித்தது.  பல விதமான தியாகங்கள், பொறுத்து கொள்ளும் மனப்பாங்கு, சிறிய குடிசை வீட்டில் அவரும், அவருடைய மனைவியும் மண்ணெண்ணெய் விளக்குடன் தினசரி ஒரு போராட்டமாய் சரவணனுக்காக வாழ்வது ஆச்சர்யமாய் இருந்தது. கதிருடைய ஒவ்வொரு வார்த்தையிலும் மாணிக்கம் சரவணனை பொருத்தி அழகு பார்த்துக்கொண்டிருந்தார்.

தனது படிப்பை முடித்து விட்டு கதிர் டெல்லிக்கு பயணமானான். அடுத்த வருடத்திலேயே அவனது மாமாவிற்கு வேறு ஊருக்கு மாற்றலாகிவிட வாழ்க்கை பரபரப்பாகி போனது.

30 வருடங்களுக்கு பிறகு "அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், சோழவந்தான்" என்ற போர்டின் கீழ் பஸ் நிற்க கதிரேசன் என்ற அந்த பெரியவருக்கு மாணிக்கத்தின் நினைவு வந்தது. தனது தொடர் பயணத்தையும் மறந்து வேகமாய் கீழே அவர் இறங்கி "ரயில்வே ஸ்டேஷன் போகணும்பா" என்று சொல்லி ஆட்டோவில் அமர்ந்தார்.

ரயில்வே ஸ்டேஷன் சிறிது அடையாளம் மாறி இருந்தது. நிறைய கடைகள் இருந்தன. சுற்றிலும் கொஞ்சம் மக்கள் கூட்டம். நிறைய மாடுகள். சற்று மூலையில் "அங்காளம்மன் இன்டர்நெட் cafe " என்று இருந்த போர்டில் கருப்பு காகம் உட்கார்ந்து இருந்தது. புதிதாய் வந்து இருந்த பிள்ளையார் கோவிலின்  கதவு பூட்டப்பட்டு இருந்தது.  வாசலில் ஒரு முதியவர் துண்டு விரித்து தூங்கி கொண்டு இருந்தார். டீ கடையில் பூம் பூம் ரோபோடா என்று எந்திரன் பாட்டு ஒலித்து கொண்டு இருந்தது.

கொஞ்சமும் மாறாமல் சிறிய புதர்களுடன் இருக்கும் அந்த ஒத்தயடி பாதையில் வேகமாய் கதிரேசன் நடக்க மஞ்சள் போர்டு தெரிந்தது. அதே பளிச். அதே தார் பூச்சு. சிமெண்ட் பெஞ்சை ஒருவித ஆனந்த தேடலில் கதிரேசன் தடவி உட்கார்ந்தார். தண்டவாளத்தை சுற்றி இருக்கும் இன்னும் இளமை மாறாத கற்களை ஆசையுடன் பார்த்தார்.

சத்தமாய் பக்கத்தில் செல் போன் சத்தம் ஒலிக்க கதிரேசன் திரும்பினார்.

"சார்! ஸ்டேஷன் மாஸ்டரா! நான் சரவணன் பேசறேன் சார்! இன்னிக்கி ப்ளூ மௌன்டைன் அரை மணி லேட்டாம். 10th ல நம்ம அருண் ஸ்கூல் பர்ஸ்டு வந்து இருக்கான் சார். எப்படியாச்சும் அவன டாக்டர் ஆக்கணும்னு ஆசை"

குரலை கேட்டு கொண்டே கதிரேசன் சிமெண்ட் பெஞ்சை விட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தார். மதிய வெயிலில் கானல் நீருடன் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை செல்லும் நீண்ட ரயில் பாதை அதே அமைதியுடனும் பிரமிப்புடனும் தெரிந்தது.

-Saveena